எந்தக் கார்யம் செய்தால் நல்லதோ அது தர்மம்.
பொதுவில் தர்மம் என்பது ஈகைக்கே வார்த்தையாக இருக்கிறது. இப்படிப் பார்த்தால் நம் பொருளை இன்னொருத்தருக்குக் கொடுப்பது தர்மம்.
தர்மம் கொடுப்பதற்கு வேண்டிய பொருள் நமக்கு எப்படி கிடைக்கும்?
முன் ஜன்மத்தில் நம் பொருளை மற்றவருக்குக் கொடுத்து தர்மம் செய்திருந்தால் தான் அது மறு ஜன்மத்தில் குட்டி போட்டுக் கொண்டு நமக்குக் கிடைக்கும்.
தர்மத்தினுடைய பிரயோஜனமே பொருள்.
சொந்தச் செலவுகளை அதமபட்சமாக்கிக் கொண்டு, தான தருமங்களுக்கு முடிந்த மட்டும் செலவழிக்க வேண்டும். செலவுகளுக்குள் நமக்கு என்று இல்லாமல், தானமாகச் செலவழிப்பதுதான் உண்மையில் நமக்கு “வரவு” இதனால் புண்ணிய வரவு கிடைக்கிறது. ஆத்ம சிரேயஸை இதனாலேயே பெறுகிறோம்.
செலவழிப்பதில் கணக்காய் இருந்தால் கொடுப்பதில் கணக்காய் இல்லாமல் இருக்க முடியும்.
சொந்த விஷயங்களில் கணக்காய் இருந்தால் ஏழை எளியவர்களாலும் கூட ஒரு பைசாவையாவது தர்மம் பண்ண முடியும்.
எடுக்க எடுக்க ஊற்றில் ஜலம் வருகிற மாதிரி கொடுக்க கொடுக்க மஹாலக்ஷ்மியின் அநுக்கிரகம் மேலும் வளரும்.
பணம் சம்பாதித்துக் கொள்வதை விட பணத்தைக் கொடுக்கிற மனப்பான்மைதான் பெரிய லக்ஷ்மி. இந்த மனோபாவத்தையும் மஹாலக்ஷ்மி அனுக்கிரகம் செய்வாள். அவளை உபாசிக்க வேண்டும்.
சிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும். அசிரத்தையோடு கொடுக்கக் கூடாது.
இன்னும் ஜாஸ்தி கொடுப்பதற்கு நம்மால் முடியவில்லையே என்று வெட்கத்தோடு கொடுக்க வேண்டும்.