அந்திம ஸ்மரணை

Submit New Post!

553768_415881758452883_1971568690_n

வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீட்சை வைத்துக் கொள்ளலாம். அதாவது:

அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா ? இதையும் ஒரு சாவு மாதிரி என்று தான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம் ? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’ போது பகவானையே ஸ்மரித்துக் கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம்.

தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விட வேண்டும். வேறே நினைப்பு வரக் கூடாது. சொல்லும்போது சுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸ்வாமியோ, முருகனோ — எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமான நமக்கு சாந்தியும், சந்துஷ்டியும் தருகிற ஒரு குரு அல்லது மகானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், “இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது ? மனசுக்கு ரம்யமாகவும், ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம் ?” என்று தான் தோன்றும். ஆனால், எதனாலோ, சிறிது நேரமானால், இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு, மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும். அப்படியே கண்ணைக் கசக்கித் தூக்கத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம், அப்யாஸத்தில், விடா முயற்சியில் தான் இருக்கிறது. நம்முடைய ஸ்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கைகொடுப்பார்.

Leave a reply

FEEDBACK

Your feedback is much important to enhance the experience of this portal and make more useful for Sri Pariyava devotees

Sending

©2019 Periyava community dedicated for his devotees

or

Forgot your details?